ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் நடிகர் விக்னேஷ் கதை நாயகனாக நடித்துள்ள படம் ‛ரெட் பிளவர்’. மனிஷா ஜெஸ்நானி, நாசர், தலைவாசல் விஜய், அஜய் ரத்னம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. அதில் பேசிய நடிகர் விக்னேஷ், ”படத்தின் தயாரிப்பாளர் எனக்கு உறவுமுறை. என் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டார். நானோ அப்படி தயாரித்தால் நாம் பிரிந்துவிடுவோம், சண்டை வந்துவிடும் என்றேன். ஆனால் உறுதியாக இந்த படத்தை தயாரித்தார்.

இதுதவிர இன்னும் இரண்டு படங்களை தயாரித்தார். ரெட் பிளவர் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கே அதிக செலவானது. இந்த படம் ரூ.8 கோடி பட்ஜெட்டை தாண்டி உள்ளது. 2040ல் இந்த கதை நடக்கிறது” என்றார். 2040ல் வரும் பிரச்னையை ரெட் பிளவர் என்ற ஆர்மி எப்படி தடுக்கிறது என்ற ரீதியில் கதை உருவாகி உள்ளது. அப்போதைய காலத்தில் பிரதமராக ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார்.
மேலும் இந்த பட விழாவில் பேசிய விஷால் ”இயக்குனர் சுராஜிற்கு டாக்டர் பட்டம் கொடுக்கணும் என்றார். ”எனக்கு தெரிந்த பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், டாக்டர்கள், உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தினமும் அதிக டென்ஷனுடன் வேலை பார்ப்பார்கள். இரவு படுக்கும்முன்பு தங்கள் டென்சனை குறைக்க, காமெடி சேனல்களைதான் பார்க்கிறார்கள். அதில் சுராஜ்-ன் பல படங்கள் இடம் பெறுகின்றன. அதனால் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்.” என்றார்.