தமிழில் ‘எட்டுத்தோட்டாக்கள்’, ‘ஜீவி’, ‘வனம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த வெற்றி, தற்போது அனிஸ் அஷ்ரப் இயக்கும் கிரைம் திரில்லர் ‘சென்னை பைல்ஸ் முதல் பக்கம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த அனிஸ் அஷ்ரப், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் உதவியாளராக பணியாற்றியவர். “நீங்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட திரில்லர் கதைகளில் ஏன் நடிக்கிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்டபோது, வெற்றி, “நான் கலர்புல் கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன்.ஆனால் எனக்கு இப்போது அதிகமாக இப்படித்தான் கதைகள் வருகிறது.

இப்போது சினிமாவைப் பொறுத்தவரையில் ‘கரு’தான் முக்கியம்; அது நன்றாக இருந்தால் எந்தப் படமாவது ஓடும். இயக்குனர் அனிஸ் இயக்கிய குறும்படத்தை பார்த்த பிறகு அவர்மீது நம்பிக்கை உருவானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு உணர்ச்சிப் பூர்வமான ஒரு கிரைம் திரில்லரை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். படம் ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது,” என்றார்.
இந்தப் படத்தில் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘காளி’ போன்ற படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத், ஹீரோயினாக நடித்துள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஸ்வரன் தேவராஜ் வில்லனாக நடிப்பதோடு, தயாரிப்பையும் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகள் மட்டும் ஒரு வருடம் நீடித்ததாக சொல்லப்படுகிறது.