‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் ராம் சரண் நடித்து வரும் புதிய படம் ‘பெத்தி’. ‘உப்பெனா’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான புச்சி பாபு சனா இப்படத்தை இயக்குகிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சிவ ராஜ்குமார், ‘மிர்சாபூர்’ புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பெத்தி’ திரைப்படம் வரும் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பை ஏ.ஆர். ரகுமான் மேற்கொண்டு வருகிறார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு, மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் தொழில்நுட்ப ரீதியாகவும், காட்சிப்படுத்தலில் வித்தியாசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், ‘பெத்தி’ படக்குழு ஜான்வி கபூரின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டது, இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன.சிவ ராஜ்குமார் இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். ராம் சரண் தனது கதாபாத்திரத்துக்காக கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேசமயம், ‘பெத்தி’ திரைப்படத்திலிருந்து முதல் பாடலான ‘ஜிகிரி ஜிகிரி’ பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

