தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், தனது முதல் படமான ‘தி லெஜண்ட்’க்கு பின், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். துரை செந்தில்குமார் முன்னதாக எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் போன்ற படங்களை இயக்கியவர். இப்புதிய படத்தில் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் சாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் லெஜண்ட் சரவணனின் ஜோடியாக, ‘உள்ளம்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துவருகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றது. இப்படத்திற்கான இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக லெஜண்ட் சரவணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி, மாற்றுத் திறமைசாலிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு, அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்து லெஜண்ட் சரவணன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், “மாற்றுத் திறமைசாலிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தருணம்” என குறிப்பிட்டிருந்தார். மாற்றுத் திறனாளிகளை ‘மாற்றுத் திறமைசாலிகள்’ என்று குறிப்பிட்டிருந்ததால், லெஜண்ட் சரவணனுக்கு பாராட்டுக்கள் பெருகி வருகின்றன.