பிரபல நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், தந்தையின் பாதையை பின்பற்றி நடிகராக இல்லாமல், அவரது தாத்தா எஸ்.ஏ சந்திரசேகர் போல் இயக்குநராக திரையுலகில் களமிறங்கியுள்ளார்.

ஏற்கனவே குறும்படங்களை இயக்கிய அனுபவமுள்ள ஜேசன், தற்போது முதல்முறையாக ஒரு முழுநீள தமிழ் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது, கதையின் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையை தமன் அமைக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வடசென்னை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு இலங்கை மற்றும் பேங்காக் போன்ற வெளிநாட்டு இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பேங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. மேலும் இன்னும் இரண்டு நாட்களில் படத்தின் முழுமையான படப்பிடிப்பு நிறைவடையும் என கூறப்படுகிறது.