நடிகை குஷ்பு அவ்னி சினிமேக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம், அவர் இதுவரை சுந்தர்.சி இயக்கிய மற்றும் நடித்த படங்களை மட்டுமே தயாரித்துள்ளார். தற்போது, அவ்னி மூவிஸ் என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கி, பென்ஸ் மீடியாவுடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், பிஜோர்ன் சுர்ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், அஸ்வின் கந்தசாமி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. படத்தின் விஷயமாக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி பேசுகையில், “இந்த படம் நகைச்சுவை, காதல் மற்றும் ஊக்கம் ஆகியவை கலந்த ஒரு கற்பனை கதையாக அமையும். இதில், இரண்டு மாறுபட்ட யதார்த்தங்களை வழிநடத்தும் ஒரு கதாபாத்திரத்தின் பயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை, நகைச்சுவை மற்றும் உணர்வுகளை தடையின்றி வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கும்” என்று கூறினார்.


இந்தக் கதை கிராமப்புறத்தின் இயற்கை அழகிலிருந்து நகர்ப்புறத்தின் சுறுசுறுப்பான சூழலுக்கு மாறும் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இது சுய கண்டுபிடிப்பு மற்றும் உறவுகளை புதியதொரு கோணத்தில் அணுகும் விதமாக இருக்கும். காதல், லட்சியம், மற்றும் அடையாளம் ஆகிய கருப்பொருள்களை, வழக்கத்திற்கு மாறான ஒரு முறையில் சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம் இது என்று தெரிவித்தார்.