பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ படம் 2019ஆம் ஆண்டு வெளியானது. மலையாளத்தைத் தாண்டி பிற மொழி ரசிகர்களும் கொண்டாடிய இப்படம் தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இந்தப் படத்தை மோகன்ராஜா இயக்கியிருந்தார்.
‘லூசிஃபர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார். அதன்படி இரண்டாம் பாகத்திற்கு ‘எம்புரான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கின்ற இந்தப் படத்திற்கான கதையை முரளி கோபி எழுதியுள்ளார். பிருத்விராஜ் இயக்குவதோடு, முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவர்களுடன் மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன், டொவினோ தாமஸ், சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைவதைக் குறித்துப் பிருத்விராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.