ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள பான் இந்தியா படம் ‘ஹரி ஹர வீரமல்லு’ நேற்று வெளியானது. இப்படத்தின் ப்ரமோஷன்களுக்காக கடந்த சில நாட்களாக பவன் கல்யாண் பிசியாக ஈடுபட்டிருந்தார். அந்த பணிகள் அனைத்தையும் முடித்து, நேற்று நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டார்.

பவன் கல்யாண் இந்நிகழ்வில் பேசுகையில், வழக்கமாக சினிமா ப்ரமோஷன்களில் நான் பங்கேற்கும் பழக்கம் இல்லை. இது என் முதல் வெற்றிவிழா நிகழ்வு. துணை முதல்வராக இருப்பதால் படம் வெளியிடுவது எளிதாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் கடந்த ஒரு வாரமாக நன்றாகத் தூங்கவே இல்லை.
கடந்த 30 ஆண்டுகளாக நான் ஒரு நடிகராக இருந்த என் அனுபவத்தைப் பற்றி கடந்த இரண்டு நாட்களாகப் பேசிவந்தேன். என்னை நான் ஒருபோதும் ஹீரோவாக நினைத்ததில்லை. ஆனால், விதி என்னை ஹீரோவாகவும், அரசியல்வாதியாகவும் மாற்றியுள்ளது” என கூறினார். மேலும், “படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களால் மிக விரும்பப்பட்டது. அதன் இரண்டாம் பாகத்தைக் கூடிய சீக்கிரம் வெளியிட நாங்கள் காத்திருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.