2003ஆம் ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பட்டாளம்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் லால் ஜோஸ் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் மூலம் டெஸ்ஸா ஜோசப் என்றவர் கதாநாயகியாக அறிமுகமானார். கதைக்களம் என்னவென்றால், ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்கிறது. இதனால் பாதுகாப்புக்காக ராணுவம் அந்த கிராமத்திற்குச் செல்லும். அங்கு வரும் ராணுவ அதிகாரியான மம்முட்டிக்கும், இளம் விதவையாக இருக்கும் டெஸ்ஸா ஜோசப்பிற்கும் காதல் மலர்கிறது. பின்னர், அவரது கணவரின் மரணத்திற்கு மம்முட்டி தான் காரணம் என தெரியவர, கதையின் முடிவு எப்படி என்பதைச் சுற்றி படத்தின் திரைக்கதை நகர்கிறது.

இந்த படம் டெஸ்ஸா ஜோசப்பிற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஆனால் ஆச்சரியமாக, இவர் இந்த ஒரே ஒரு படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். 2015ஆம் ஆண்டு மீண்டும் சில படங்களில் நடித்து திரும்பினார். ஆனால் அந்த படங்கள் சரியான வாய்ப்பு கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘தலைவன்’ என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் மூலம் அவர் திரும்பினார்.

சமீபத்திய பேட்டியில் டெஸ்ஸா ஜோசப் கூறியதாவது: “நான் சினிமாவுக்கு வந்த காலத்தில், சினிமாவைச் சுற்றி பல தவறான தகவல்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்தன. நான் நடித்த சமயத்தில் சில விஷயங்களை கேட்டும், சிலவற்றை நேரில் பார்த்தும் என் அம்மா மிகவும் பதட்டமடைந்தார். எனது முதல் படம் வெற்றிபெற்றபோதும், அதற்குப் பிறகு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று கூறி, அந்த படம் வெளியான பிறகு வந்த முதலாவது திருமண சந்ததியை பார்த்து முடித்துவிட்டார்.
பின்னர் திருமண வாழ்க்கை, குழந்தைகள் பராமரிப்பு ஆகியவற்றில் காலம் கடந்துவிட்டது. மீண்டும் சினிமாவிற்கு வரலாம் என எண்ணியபோது, வாய்ப்புகள் எளிதாக கிடைக்கவில்லை. சினிமா உலகம் மாறிவிட்டது. கடந்த வருடம் வெளியான ‘தலைவன்’ படம் எனக்கு மீண்டும் மலையாள திரையுலகிற்கு வர ஒரு வாய்ப்பு அளித்தாலும், இன்றுவரை ரசிகர்கள் என்னை ‘பட்டாளம்’ படத்தில் நடித்த விமலா என்ற பாத்திரமாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.