இயக்குநர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜயகாந்த், சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடித்த, 1991ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கேப்டன் பிரபாகரன். சந்தன மரம் கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த ஆக்ஷன் படம், வெளியான காலத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப் படத்தை, விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, ஆகஸ்ட் 22ஆம் தேதி மீண்டும் வெளியிட உள்ளனர். இதற்கான டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அப்போது இயக்குநர் ஆர்கே செல்வமணி, நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் மன்சூரலிகான், மேலும் இயக்குநர்கள் எஸ்ஏ சந்திரசேகரன், விக்ரமன், ஏஆர் முருகதாஸ், லிங்குசாமி, விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
4K தரத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் புதிய டிரைலர், விழாவின் போது திரையரங்கில் திரையிடப்பட்டது. அதோடு யூடியூப்பிலும் வெளியிடப்பட்டது. புதிய படங்களுக்கு உருவாக்கப்படும் முறையில், சிறந்த தொகுப்புடன் இந்த டிரைலர் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் டிரைலர் வடிவமைக்கப்பட்டுள்ளது.