பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சேரன். இவர் 2004-ம் ஆண்டு எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்த படம் ‘ஆட்டோகிராப்’. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பள்ளி, கல்லூரி, இளமை என மூன்று கட்டங்களிலும் கதாநாயகன் அனுபவித்த காதல் கதைகளை உணர்ச்சியோடு பதிவு செய்திருந்தார் சேரன். படம் வெளியாகியதும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
இதோடு மூன்று பிரிவுகளில் தேசிய விருதும் பெற்றது. “ஒவ்வொரு பூக்களுமே…” பாடலைப் பாடிய சித்ரா மற்றும் பாடல் வரிகளை எழுதிய பா.விஜய் ஆகியோர் தேசிய விருதை வென்றனர்.
இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாவதை ஒட்டி, புதிய ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டிரெய்லர் வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிப்ரவரி 19 அன்று வெளியிட்டார்.
இதையடுத்து, படம் மே 16 அன்று ரீ-ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. சமீபத்தில், நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து ‘ஆட்டோகிராப்’ ரீ-ரிலீஸ் டிரெய்லரை வெளியிட்டனர்.

