நடிகர் சூரி காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக வெற்றி பெற்றார். இந்த படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. இப்படத்திற்குப் பிறகு, அவர் கதையின் நாயகனாக தொடர்ச்சியாக பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் வெளியான ‘விடுதலை 2’ படத்திலும் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
‘விடுதலை 2’ படம் வெளியானது 25 நாட்களை கடந்த நிலையில், நடிகர் சூரி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டார். அதில், ”விடுதலை 1 மற்றும் விடுதலை 2 ஆகிய படங்கள் என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கிய படங்களாக எப்போதும் நினைவில் நிற்கும். குமரேசனாக நடித்தது என் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகவும் தனிப்பட்ட அடையாளமாகவும் இருக்கும்.
என் தொலைநோக்கு இயக்குநர் வெற்றிமாறன் சாருக்கும், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சாருக்கும், இந்த மறக்க முடியாத பயணத்தை சாத்தியமாக்கிய சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் இதயபூர்வமான நன்றி. உதவியாளர் மற்றும் இணை இயக்குநர்களுக்கும் சிறப்பு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். உங்கள் கடின உழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாமல் இந்த பெரிய சாதனையை அடைந்திருக்க முடியாது. அனைத்து ஊடகங்கள் மற்றும் திரை ரசிகர்களின் உண்மையான அன்புக்கும் ஆதரவிற்கும் என்றும் நன்றி. நீங்கள் என் மிகப்பெரிய பலமாக உள்ளீர்கள்,” என்று தெரிவித்துள்ளார்.