அறிமுக இயக்குநரான ஜே.பி. துமிநாட் இயக்கிய திரைப்படம் ‘சு ஃப்ரம் சோ’ (பூரணமாகச் சொல்லப்போனால்: சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா) கடந்த ஜூலை 25ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் எந்தவிதமான பெரிய அளவிலான விளம்பரங்களும் இல்லாமல் நேரடியாக திரையரங்குகளில் வெளியானது. ஆனால், படம் வெளியான சில நாட்களுக்குள்ளாகவே, பாசிட்டிவான விமர்சனங்கள் மவுத் டாக்காக காட்டுத் தீ போல பரவின.

வெறும் ரூ.6 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த சிறிய திரைப்படம், தற்போது வரை இந்திய அளவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்து சினிமா வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குமேலும், ‘புக் மை ஷோ’ தளத்தில் இந்தப் படத்திற்கு 10 லட்சத்துக்கும் மேல் டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இப்படம் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி கேரளாவில் வெளியாகி, அங்கும் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றது.
மேலும் தெலுங்கு மொழியிலும் வெளியாகி அங்கும் தற்போது வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு திரைப்படம் பெரிய பட்ஜெட்டோ அல்லது சிறிய பட்ஜெட்டோ அதன் கதை மற்றும் திரைக்கதை வலிமையாக இருந்தால் மக்கள் மத்தியில் அதுவாகவே சென்றடைந்து மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதற்கு ‘சு ஃப்ரம் சோ’ திரைப்படம் ஒரு உதாரணம் தான்.