சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சசிகுமார் ‘பீரிடம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சத்யசிவாஇயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றியுள்ளார். இப்படம் வருகிற 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘பீரிடம்’ திரைப்படம் 1995ஆம் ஆண்டு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது என சசிகுமார் தெரிவித்துள்ளார். அவர் இப்படம் குறித்து பேசுகையில் தரமான, வித்தியாசமான கதைகளில் நடிக்க நான் இப்போது தயாராகியுள்ளேன். அதற்கான எடுத்துக்காட்டாக ‘நந்தன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘பீரிடம்’ ஆகிய படங்களை கூறலாம்.
1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சிறையிலிருந்து தப்பிய இலங்கை அகதிகளை மையமாகக் கொண்ட உண்மை சம்பவங்களைத் தழுவி ‘பீரிடம்’ உருவாகியுள்ளது. இந்தப் படம் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டது,” என அவர் கூறினார்.