தென்னிந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகரான மோகன்லால், பிருத்விராஜ் இயக்கத்தில், 2019 ஆம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘எல் 2 எம்புரான்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில், படக்குழு இப்படத்தில் இடம்பெற்றுள்ள முக்கியமான 36 கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டரை வெளியிட்டது. இதில் டோவினோ தாமஸ் ‘ஜதின் ராமதாஸ்’, பிருத்விராஜ் ‘சையத் மசூத்’, மோகன்லால் ‘குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி’ என்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் பான் இந்தியா அளவில் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘எல் 2 எம்புரான்’ பற்றி பேசிய மோகன்லால்,முதல் பாகமான ‘லூசிபர்’ திரைப்படத்தின் இறுதியில், ஸ்டீபன் நெடும்பள்ளியான நான் ‘குரேஷி ஆபிராம்’ என அறிமுகமானேன். தற்போது உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தில், ஆபிராம் யார்? என்பதற்கான விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘எம்புரான்’ எனது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய படமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். மேலும், இதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்பட்டது. நீங்கள் எல்லோரும் எதிர்பார்ப்பதைப் போல, நானும் மார்ச் 27 ஆம் தேதிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.