தெலுங்கு திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அதிவி சேஷ், தற்போது ‘டகாய்ட்: எ லவ் ஸ்டோரி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. இப்படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படமும் வெளியாகிறது.

இதுகுறித்து அவரிடம், “யாஷ் படத்துடன் ஒரே நாளில் உங்கள் படம் வெளியாவதில் உங்களுக்கு தயக்கம் இல்லையா? என்று கேட்கப்பட்டபோது, அதிவி சேஷ் பதிலளிக்கையில், எனக்கு யாஷ் படத்துடன் மோதுவதில் எந்தப் பயமும் இல்லை. இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியானால் அதில் ஒன்று மட்டுமே வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஒரு தவறான கருத்து. இது மீடியாக்கள் ஏற்படுத்திய பிம்பம். ‘லகான்’ மற்றும் ‘கதார்’ இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியான போதும் இரண்டும் சூப்பர் ஹிட் ஆனதுதானே.
எப்போதும் நான் குறைந்த எதிர்பார்ப்புடன் ஒரு படத்தை கொடுத்து, மக்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை அளிக்க விரும்புகிறேன். இதேபோல, யாஷ் நடித்த ‘கேஜிஎப்’ படமும், ஷாருக்கான் நடித்த ‘ஜீரோ’ வெளியான நாளில் திரைக்கு வந்தது. அப்போது யாஷ் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதுபோலத்தான் இப்போதும் எங்கள் படத்தையும் வெளியிடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

