சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு சமீபத்தில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஒரு முக்கியக் காட்சியில், ரஜினிகாந்த் மூன்று நிமிடங்களுக்கு மேல் இடைவிடாமல் ஆவேசமாக வசனம் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது என்பதை அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் இடைவேளை காட்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என்றும், அது ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய ஒரு அனுபவத்தை தரக்கூடியதாகவும் இருக்கும் என லோகேஷ் தெரிவித்துள்ளார். இதுவரை யாரும் இப்படியான இடைவேளை காட்சியைச் செய்ய முயற்சி செய்யவில்லை என்றும், இதனை செய்து காட்டியிருப்பது எனது பெருமை என அவர் கூறியிருக்கிறார். இந்த தகவல்கள் படம் மீதான எதிர்பார்ப்பை கூடிய அளவில் உயர்த்தி உள்ளன.
இதே நேரத்தில், இன்று காலை 11 மணிக்கு கேரளாவில் கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியதும், ஒரு மணி நேரத்திலேயே ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று முடிந்தன. தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்கள் போலவே, கேரளாவிலும் இந்த படத்திற்கான வரவேற்பு மிக உயர்ந்துள்ளது. ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கேரளாவில் ரூ.50 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.