ரோஜா, ஜென்டில்மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துத் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மதுபாலா. அவரது பேரழகும், சிறந்த நடிப்பும் தென்னிந்திய ரசிகர்களை மட்டுமின்றி, பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தன. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த அவர், இந்தி மொழியிலும் பல திரைப்படங்களில் நடித்தார்.

பின்னர் திருமணமாகி, இரண்டு மகள்களுக்கு தாயான பிறகு, நீண்ட காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். தற்போது மீண்டும் திரையுலகில் நடிக்கத் தொடங்கியுள்ள அவர், ‛ஸ்வீட் காரம் காபி’ என்ற வெப் தொடர் மற்றும் ‛கண்ணப்பா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது ஆரம்பகால சினிமா பயணத்தில் பாலிவுட்டில் சந்தித்த கேலி சம்பவங்களைப் பற்றி மதுபாலா கூறியதாவது: “ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய கலைஞர்கள் பாலிவுட்டில் பெரும் கேலிகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. அப்போது நாங்கள் சந்தித்த அவமானங்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தின. நாம் அனைவரும் இந்தியர்களே; இப்படி ஒருவருக்கொருவர் ஏன் நடந்து கொள்ள வேண்டும்? அவர்கள் எங்களைப் பற்றி செய்த கேலிகளுக்கு அந்நேரத்தில் பதில் அளிக்க முடியவில்லை. எப்படி எதிர்க்க வேண்டும் என்பதையும் எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.