தமிழில் ‘தூங்காவனம்’, ‘கடாரம் கொண்டான்’, ‘இரை’ வெப்சீரிஸ் போன்ற ஸ்டைலிஷ் த்ரில்லர் படைப்புகளை வழங்கிய இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ள புதிய வெப் சீரிஸ் தி கேம் : யூ நெவர் பிளே அலோன் நாளை நெட்பிளிக்சில் வெளியாகிறது. ஏழு எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரில், விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாந்தினி தமிழரசனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் கூறுகையில், “கேமிங் துறையில் பணிபுரியும் திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது. இன்றைய சமூக வலைதளங்கள் அவர்கள் குடும்ப வாழ்வில் எப்படி தலையிடுகின்றன என்பதையும், அதேபோல் ஒரு பெண் காவலர், 15 வயது சிறுமி, 65 வயது வசந்தா ஆகியோரின் வாழ்க்கையையும் அது எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் இந்தக் கதையில் காணலாம்” என்றார்.
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், “என் கதாபாத்திரம் காவ்யா என்ற கேம் டெவலப்பர். தைரியமாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிரும் அவள், பாராட்டுகளைப் பெறுவதோடு, அதைவிட அதிகமாக வெறுப்பையும் சந்திக்கிறாள். இது அவளது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. வேலைக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் இடையே குழம்பிப் போகும் இன்றைய பல பெண்களை இந்தக் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது” எனக் கூறினார்.

