‘ஈட்டி’ மற்றும் ‘ஐங்கரன்’ படங்களை இயக்கிய ரவி அரசு, விஷாலின் 35வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கான இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைக்கிறார். ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் விஷாலுக்காக இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஆர். பி. சௌத்ரியின் ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இது அந்த நிறுவனம் தயாரிக்கும் 99வது படமாகும். இதில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும், அஞ்சலியும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. அதன் பின் படப்பிடிப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு ‘மகுடம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.
இந்நிலையில், ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்து வெளியிடப்பட்ட அந்த போஸ்டரில், விஷால் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.