நடிகரும் இயக்குநருமான சீமான் தற்போது முழுமையாக அரசியலில் செயல்பட்டு வந்தாலும், அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் விவசாயியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இயக்குநர் மு.கழஞ்சியம், சீமானை கதாநாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ‘தர்மயுத்தம்’ எனும் தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்த ‘தர்மயுத்தம்’ என்ற திரைப்படம் ஏற்கனவே 1979ஆம் ஆண்டு வெளியாகியிருந்தாலும், தற்போது அதே பெயரில் புதிய படம் உருவாகியுள்ளது.
‘தீர விசாரிப்பதே மெய்’ என்ற ஹேஷ்டேக் உடன் வெளியான போஸ்டரில், சீமான், அனு சித்தாரா மற்றும் ஆர்கே சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை எழுதி இயக்கும் ஆர். சுப்பிரமணியம், தயாரிப்பாளர்களான ஆதம்பாவா மற்றும் சிவக்குமாருடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்நிலையில், நடிகர்கள் சீமான், ஆர்.கே.சுரேஷ், மற்றும் கழஞ்சியம் நடித்துள்ள ‘தர்மயுத்தம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார்.