தமிழ் சினிமாவில் தனித்துவமான உடல்மொழியும், தனிச் சொற்கள் உச்சரிக்கும் பாணியும் கொண்டிருந்தவர் நடிகர் ரகுவரன். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனது பாத்திரத்துக்கு நியாயம் செய்யும் வகையில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ‘புரியாத புதிர்’ திரைப்படத்தில் அவர் பேசிய “ஐ நோ.. ஐ நோ..” (I know.. I know..) என்ற வசனம், இன்றும் பலரின் நினைவில் உள்ளது.
ரெட், சிவப்பதிகாரம், பாட்ஷா, முதல்வன், யாரடி நீ மோகினி போன்ற படங்கள் அவரது திரைப்பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி, அவரது தனிப்பட்ட எண்ணங்களும், பேச்சுகளும் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், 2008-ஆம் ஆண்டு காலமான ரகுவரனின் திரைப்பயணத்தையும், அவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒரு ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தை ஹாசிப் அபினா ஹகீப் என்பவர் இயக்கியுள்ளார். விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தின் முதல் போஸ்டரை, நடிகர் ரகுவரனின் மனைவியுமான நடிகை ரோகிணி, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.