தமிழ் சினிமாவில் சிறப்பான இரட்டை இயக்குநர்களாக பெயர் பெற்ற புஷ்கர் மற்றும் காயத்ரியின் எழுத்தில் உருவான ‘சுழல்’ வெப் தொடர், 2023ம் ஆண்டு வெளியானபோது பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது, அதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ சீசன் 2 வெப் தொடரை பிரம்மா மற்றும் சர்ஜுன் இணைந்து இயக்கியுள்ளனர்.
எட்டு எபிசோட்கள் கொண்ட இந்த தொடரில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் கவுரவ தோற்றத்தில் நடிக்கின்றனர்.

இந்த தொடரை வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பிப்ரவரி 28ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ள ‘சுழல் – 2’ வெப் தொடர், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட உள்ளது. தற்போது, இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது குறித்து தொடரின் இயக்குநர்கள் கூறியதாவது, காளிபட்டணம்” என்ற கற்பனை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்டகாளி திருவிழா பற்றிய பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தின் மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான லால், மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி, முழு கிராமத்தையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இந்தக் கொலையின் மர்மத்தை கதிர் எவ்வாறு கண்டுபிடிக்கிறார்? இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் பங்கு என்ன? இவை அனைத்தும் சுவாரஸ்யமாக, எதுவும் குறையாமல் படமாக்கப்பட்டுள்ளன.” என்று கூறியுள்ளனர்.