சினிமா துறையில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார் ஜெயலட்சுமி. தனது சொந்த நிறுவனமான ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில், அவரே தயாரித்து, இயக்கும் திரைப்படம் ‘என் காதலே’. ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், ‘காலேஜ் ரோட்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த லிங்கேஷ், இந்த படத்தில் முக்கிய கதாநாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த நடிகை லியா மற்றும் திவ்யா தாமஸ் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். புதிய நடிகர் காட்பாடி ராஜன் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் மதுசூதனன் ராவ், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைப் பற்றிய இயக்குநர் ஜெயலட்சுமி கூறியதாவது: “மீனவ மக்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு மென்மையான முக்கோணக் காதல் கதையாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். லண்டனிலிருந்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை ஆராயும் நோக்குடன் இந்தியா வருகிற நாயகி லியா, மீனவ இளைஞனான லிங்கேஷை காதலிக்க தொடங்குகிறாள். ஆனால் லிங்கேஷுக்கு உள்ளுறை பிரச்சனைகள் காரணமாக அவரது காதலை ஏற்க முடியாத நிலை ஏற்படுகிறது. இறுதியில் லியாவின் ஆராய்ச்சி எங்கு சென்றது, அவர்களது காதல் நிறைவேறியதா இல்லையா என்பது உணர்ச்சியோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்த படத்தை ஒரு புதிய அனுபவமாக உணர்வார்கள்” என்று தெரிவித்தார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளா, காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி போன்ற கடலோர பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கோடை விடுமுறையைக் கொண்டாடும் விதமாக, இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது என இயக்குநர் ஜெயலட்சுமி கூறியுள்ளார்.