அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுனின் 22வது திரைப்படமாகவும், அட்லியின் 6வது திரைப்படமாகவும் இருக்கும் இந்த படத்தைச் சுற்றி ‘பகிரக்கூடாத ஒப்பந்தம்’ ஒன்று படக்குழுவினரிடம் கையெழுத்தாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி, படம் முடியும் வரை அதற்கான எந்த தகவலையும் வெளியே பகிரக்கூடாது. இதை ஆங்கிலத்தில் ‘Non Disclosure Agreement’ (NDA) என அழைக்கின்றனர். தமிழில் இதை ‘ரகசிய ஒப்பந்தம்’ எனலாம். அதாவது, படத்தின் ரகசியங்களை யாரும் வெளிப்படுத்தக்கூடாது.
சுமார் 800 கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்ற உள்ளனர். கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக படப்பிடிப்பு தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஹாலிவுட் கலைஞர்கள் பணிபுரிவதால், எந்தவித சிக்கலும் ஏற்படாமல் சிறப்பாக படப்பிடிப்பு நடைபெறுமாறு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.