நடிகர் சசிகுமார் நடிப்பில், கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அயோத்தி. இந்த திரைப்படத்தை இயக்கியவர் மந்திர மூர்த்தி. இதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் யாஷ்பால் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த கதையில், உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தியில் வசிக்கும் குடும்பம், ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா செல்லும் போது, திடீரென ஒரு விபத்தில் ஒருவர் உயிரிழக்கிறார். அந்த நேரத்தில், நடிகர் சசிகுமார் அந்த குடும்பத்திற்காக விமானம் மூலம் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவுகிறார். இதுவே படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது.
இந்நிலையில், டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சசிகுமார், அப்போது பேசியதாவது: “அயோத்தி திரைப்படத்தின் தாக்கம் காரணமாக, விமானத்தில் உடலை கொண்டு செல்வதற்கான நடைமுறைகள் இப்போது எளிமையாகிவிட்டது. இத்தகைய பயணங்களுக்கு ரூ.1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மை பெற்றுள்ளன என ஒருவர் எனக்கு தெரிவித்தார். எனக்கே தெரியாமல் ஒரு நல்ல காரியம் நிகழ்ந்துள்ளது,” என உருக்கமாக கூறினார்.