இந்திய ஓடிடி தளங்களில் வெளியான வெப் தொடர்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற தொடர்களில் ஒன்று தி பேமிலி மேன் எனும் தொடர் ஆகும். அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இதன் முதல் இரு சீசன்களும் பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்த தொடரின் மூலம் இரட்டையர் இயக்குநர்களான ராஜ்–டிகே பெரும் புகழ் பெற்றனர்.

முதல் சீசனில் பிரியாமணி நடித்த கதாபாத்திரம் பாராட்டு பெற்றது; இரண்டாவது சீசனில் சமந்தா நடித்த கதாபாத்திரம் தென்னிந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவன், நாட்டிற்காக உளவாளியாக செயல்படும் போது எதிர்கொள்ளும் தடைகளை மிகவும் இயல்பாகவும், தத்ரூபமாகவும், அதே நேரத்தில் திகில் நிறைந்த முறையிலும் சொல்லியுள்ள விதம் இப்படத்தை அதிகரித்த ரசனைக்குரியதாக மாற்றியது.
நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, இத்தொடரின் மூன்றாவது சீசன் நேற்று (நவம்பர் 21) அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது. உளவாளியும், குடும்பத் தலைவருமான ஸ்ரீகாந்த் திவாரி கதாபாத்திரத்தில் மீண்டும் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ளார். இந்த பாகத்தில் பாலிவுட் நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத் எதிர்மறை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். முதல் பாகத்தில் காஷ்மீர் பின்னணியாகவும், இரண்டாவது பாகத்தில் இலங்கை பின்னணியாகவும் இருந்த கதை, இந்த சீசனில் வடகிழக்கு இந்திய மாநிலங்களை மையமாகக் கொண்டுள்ளது. முன்பு வெளிநாட்டு அரசியலை மையமாக்கிய இந்தத் தொடர், இம்முறை இந்தியாவின் உள்நாட்டு அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது..

