புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு திரையிடலின்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஒரு பெண் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


இந்த சம்பவத்திற்கிடையில், தெலங்கானா மாநில அரசு சிறப்பு மற்றும் அதிகாலை காட்சிகள் உள்ளிட்டவற்றுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க இன்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் முன்னணி நடிகர்கள் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, நடிகர்கள் நாகார்ஜுனா மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “சிறப்புக் காட்சிக்கு எந்த அனுமதியும் இல்லை. சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்ய முடியாது. ரசிகர்களைக் கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு. ஆனால் தெலுங்கு சினிமாவின் வளர்ச்சிக்காக அரசு உறுதியாக துணை நிற்கும்” என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.