இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள பேண்டஸி படம் ‘கங்குவா’. இதில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய வேடத்தில் உள்ளார். நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ள இதற்கான விளம்பரப் பணிகளில் படக்குழு முழுமையாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் படத்தின் 3டி டிரைலர் வெளியீட்டு விழாவில் கங்குவா குழுவுடன் சூர்யா பங்கேற்றார்.
அப்போது சூர்யா பேசுகையில், “தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இல்லையென்றால், கங்குவா உருவாகியிருக்காது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் அழகான அனுபவமாக இருந்தது. சுமார் 170 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இது ஒருவித கனவு போன்றது. பணத்தைத் தாண்டி ஒவ்வொருவரும் முழுமையாக உழைத்திருக்கிறோம். ஒளிப்பதிவாளர் வெற்றி கங்குவாவின் தரத்தை மற்றுமொரு நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். இந்த ஒளிப்பதிவை பார்த்து, இந்திய சினிமாவின் இயக்குனர்களும் படைப்பாளிகளும் மிரண்டு போவார்கள். இதை மிகப் பணிவாக சொல்கிறேன்,” என்றார்.
படத்தைப் பார்த்த பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர், “இது எப்படி சாத்தியம்?” என ஆச்சரியப்பட்டார். இதற்கு முன், இப்படியொரு திரையரங்க அனுபவத்தை காணவே கிடையாது. 700 ஆண்டுகளுக்கு முந்தைய கதை பற்றிய இப்படம் வெறும் சண்டை காட்சிகள் கொண்டதல்ல. இதில் ஒருவரின் உள்ளும் புறமும் பேசப்பட்டுள்ளது; மன்னிப்பும் முக்கியமாக உள்ளது. ஒருவரின் உண்மை முயற்சிக்கு பலன் கிடைக்கும்போது, கங்குவாவிற்கு 3000 பேர் உழைத்துள்ளனர். மீண்டும் சொல்கிறேன், படம் நெருப்புபோல் இருக்கும். கங்குவாவை வாயைப் பிளந்து பார்ப்பார்கள்; தமிழ் சினிமாவில் இப்படியொரு படத்தை உருவாக்க முடியும் என்பதை இது காட்டும். நவம்பர் 14ம் தேதி படம் வெளியாகும் போது இரட்டை தீபாவளியாக இருக்கும்,” என்றார் சூர்யா.