2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடித்த ‘அம்பிகாபதி’ திரைப்படம் வெளியானது. இந்த படம் தனுஷுக்கு இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படமாகும். படம் வெளியானதும், அது பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது. இப்படத்திற்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் அதன் அனைத்து பாடல்களும் பிரபலமானவை.

இந்த நிலையில், இப்படம் வெளியானதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், படத்தை மீண்டும் வெளியிட்டுள்ளனர். ஆனால், ரீ-ரிலீசில் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மாற்றப்பட்டுள்ளது. அதாவது, படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் மாற்றி, கதாநாயகன் தனுஷ் உயிருடன் மீண்டு வருவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றம் ரசிகர்கள் பலரிடையே அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் ஆனந்த் எல். ராய் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். “அம்பிகாபதி திரைப்படத்தை மீண்டும் வெளியிடும் முன் என்னிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. மேலும், படத்தின் இறுதிக் காட்சியை மாற்றியிருப்பதை நான் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இது எனது படைப்பை அவமதிப்பதற்கு சமமானது. இதை ஒரு துரோகமாகவே நான் கருதுகிறேன்,” என கூறியுள்ளார்.