2019 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘தொரசானி’ என்ற படத்தின் மூலம் நடிகை சிவாத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்த அவர், தனது நடிப்பால் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடித்த ‘பாம்’ திரைப்படம் கடந்த 12-ம் தேதி வெளியானது. இந்நிலையில், அண்மையில் அளித்த நேர்காணலில், தனது முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை நினைவுகூர்ந்தார்.
அவர் கூறுகையில், ‘‘என்னுடைய முதல் படம் ‘தொரசானி’. அந்த படத்தில் 18 வயது பெண் கதாபாத்திரத்திற்கான நடிகையை தேடிக் கொண்டிருந்தனர். அதற்காக தெலுங்கை சரியாக உச்சரிக்கக்கூடியவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. எனது 18-வது பிறந்தநாள் விழாவிற்கு ‘தொரசானி’ படத்தின் தயாரிப்பாளர் வருகை தந்திருந்தார். அப்போது அவர் என்னை அந்தப் படத்தின் ஆடிஷனில் கலந்துகொள்ளுமாறு அழைத்தார். ஆடிஷனுக்கு சென்றபோது, நான் அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்துவேன் என்று கருதி என்னைத் தேர்வு செய்தனர். பின்னாளில், அந்தப்படத்திற்காக 90 பேர் வரை ஆடிஷனில் கலந்து கொண்டதாகவும், அவர்களில் இருந்து என்னைத் தேர்வு செய்ததாகவும், படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் கூறியதாக’’ அவர் தெரிவித்துள்ளார்.