பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது. ‛அய்யா’ எனும் தலைப்பில் உருவாகும் இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குநர் சேரன் இயக்குகிறார். நடிகர் ஆரி, டாக்டர் ராமதாஸாக நடிக்கிறார். இப்படத்தை தமிழ்குமரன் தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, இயக்குநர் சேரன் இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக, அவர் பலமுறை ராமதாசை நேரில் சந்தித்து அவருடைய வாழ்க்கை நிகழ்வுகள், அரசியல் பயணங்கள், போராட்டங்கள் குறித்த விவரங்களைத் திரட்டி, திரைக்கதையாக மாற்றியுள்ளார். இந்நிலையில், இன்று ராமதாஸின் பிறந்தநாளையொட்டி “அய்யா” படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“அய்யா” திரைப்படத்தின் கதையில், ராமதாஸ் அவர்களின் ஆரம்பகால வாழ்க்கை, அவர் நடத்திய கூட்டங்கள் மற்றும் அதில் எதிர்கொண்ட சவால்கள் விவரிக்கப்படுகின்றன. குறிப்பாக, 1980–90க்குள் நடந்த அவரது அரசியல் வாழ்க்கை நிகழ்வுகளே மையமாகும். இது வரை இயக்குநர் சேரன் பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும், இவர் இயக்கும் முதல் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இது என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.