இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறுபவராகவும், அதிக சொத்துகளை உடையவராகவும் விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார்.

இப்போது, ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஒடிஷா மாநிலத்தின் கோராபுட் பகுதியில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு முன்பாக, அமெரிக்கா செல்ல விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு தனது காரை ஓட்டிச் சென்றார் பிரியங்கா. அந்தப் போது, ‘கொய்யா’ விற்ற ஒரு பெண் தனது செயலால் தனக்கு ஊக்கம் அளித்ததாக கூறி, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இன்று நான் மிகவும் ஊக்கமடைந்தேன். மும்பை வழியாக அமெரிக்கா செல்லும் முன், விசாகப்பட்டினம் விமான நிலையம் வரை கார் ஓட்டிக்கொண்டிருந்தேன். வழியில் ஒரு பெண் கொய்யா விற்றதைப் பார்த்தேன். எனக்கு அது மிகவும் பிடிக்கும். எனவே, அந்தப் பெண்ணிடம் விலையை கேட்டேன். அவர் 150 ரூபாய் என்றார். நான் அவரிடம் 200 ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை வைத்துக்கொள்ள சொல்லிவிட்டேன். அவரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால், சிக்னல் சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறும் தருணத்தில், அவர் திரும்பி வந்துவிட்டு, மேலும் இரண்டு கொய்யாக்களை எனக்கு வழங்கினார். அந்த பெண் மிகுந்த உழைப்பாளி. ஆனால், அவர் தர்மத்தை விரும்பவில்லை,” எனப் பகிர்ந்துள்ளார் பிரியங்கா.