அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிராகன்’ படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், விஜே சித்து உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று, பிப்ரவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன், சிம்பு குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.அவர் கூறுகையில், ‘போடா போடி’ படத்தில் ‘மாட்டிக்கிட்டேன்’ என வரும் ஒரு பாடலை பற்றி விளக்கினார். அந்த பாடலை உருவாக்குவதற்கே ஒன்றரை ஆண்டுகள் பிடித்ததாகவும், அதற்குள் சிம்பு ஒரு முக்கியமான விஷயத்தை அவருக்குத் தெரிவித்ததாகவும் கூறினார்.

“ஒரு நாள் சிம்பு சார் என்னை அழைத்து, ‘டேய் விக்கி, நீ நல்லா பாட்டு எழுதுற. ஆனா ‘மாட்டிக்கிட்டேன்’ என்ற வார்த்தையை போட்டிருக்கு. இப்ப பாரு, ஒன்றரை வருடங்களாக இந்தப் பாடலை எடுக்க முடியல’ எனக் கூறினார். அந்த சம்பவத்திற்குப் பிறகு, எந்தப் பாடலையும் மிகுந்த கவனத்துடன் எழுத தொடங்கினேன். எனது பாடலாசிரியா வாழ்க்கையில் இது ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. உண்மையில், நான் பாடல் எழுத ஆரம்பித்த போது, சிம்பு சார் தான் எனக்கு உற்சாகம் அளித்து, ‘நீ நல்லா எழுதுற, நீயே பாட்டு எழுதுடா’ என்று ஊக்குவித்தார். இதை தொடர்ந்து ‘ஆரம்பம்’ படத்தில் ‘எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்’ என ஒரு வரியை எழுதினேன். அந்தப் படத்திற்குப் பிறகே எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது. இது என் வாழ்க்கையை மாற்றிய நிகழ்வாக இருந்தது” என அவர் உருக்கமாக பகிர்ந்துகொண்டார்.