தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, தற்போது தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம், அவர் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்தில், ‘பப்ளி பவுன்சர்’, ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ போன்ற படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியானதும், நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதன் தொடர்ச்சியாக, தற்போது தமன்னா, ‘ஒடேலா 2’ படத்தில் நடித்து வருகிறார். இது, 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளிவந்த ‘ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன்’ திரைப்படத்தின் சக்சஸ் சீக்குவல் ஆகும். இந்தப் படத்தையும், முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜா தான் இயக்குகிறார்.

ஹெபா படேல், வசிஷ்ட என். சிம்ஹா, நாக மகேஷ், வம்சி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘காந்தாரா’ புகழ் அஜனேஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதில், தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.சமீபத்தில், இந்தப் படத்தின் ‘First Look’ போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியானதும், இணையத்தில் வைரலானது. இந்நிலையில், படத்தின் டீசர் வருகிற 22-ம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் வெளியிடப்பட உள்ளது. இதனால், இப்படத்தை பற்றிய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.