தெலுங்கு திரையுலகில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவரை ரசிகர்கள் அன்புடன் ‘பாலய்யா’ என்று அழைப்பார்கள். அவர் எந்த ஒரு நிகழ்ச்சிக்காவது வருவதாகத் தெரிந்தாலே, “ஜெய் பாலய்யா!” என்று கத்தி உற்சாகம் காட்டுவார்கள்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பாலகிருஷ்ணாவுக்கு சிறந்த ரசிகர்கள் வட்டம் உள்ளது. சென்னையில் படிக்கும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மாணவர்கள் அவருடைய படங்களை உற்சாகமாக கொண்டாடுவார்கள். இதனால் தமிழகத்திலும் பாலகிருஷ்ணா படங்கள் கணிசமான அளவில் திரையிடப்படுகின்றன.
2021ஆம் ஆண்டு அவர் நடித்த ‘அகண்டா’ திரைப்படம் தமிழகத்திலும் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘அகண்டா பார்ட் 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி தெலுங்கில் மட்டுமல்ல, தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.இதற்காக வெளியிடப்பட்ட ‘அகண்டா 2’ படத்தின் முன்னோட்ட வீடியோவில், “சவுண்டை கண்ட்ரோல்ல வச்சுக்கோ… எந்த சவுண்டுக்கு சிரிப்பேன், எந்த சவுண்டுக்கு வெட்டுவேன்னு எனக்கே தெரியாது… உன்னால நினைச்சு கூட பார்க்க முடியாது” என்று பாலகிருஷ்ணா ஆக்ரோஷமாக பேசும் டயலாக் இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் தமிழிலும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

