தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக பிரபலமடைந்தவர் ரவி மோகன். ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடக்கத்திலிருந்தே தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அவர் ‘ஜீனி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ரவி மோகனின் 34வது படத்திற்கு தற்காலிகமாக ‘ஆர்.எம் 34’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்க, ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்திற்கான இசையை வழங்க, சக்தி, காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில், ‘ஆர்.எம் 34’ படத்தின் தலைப்பு டீசர் வெளியிடப்பட்டது. அதன்படி, இப்படத்திற்கு ‘கராத்தே பாபு’ என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தவ்தி ஜிவால் திரைத்துறையில் அறிமுகமாகிறார்.