தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தற்போது அவர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் தற்காலிகமாக ‘சூர்யா 45’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவிருக்கிறார். 20 வருட இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணையும் படம் என்பதால், ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த மாதம் கோயம்புத்தூரில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது. அதன் பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை வண்டலூர் அருகே வெளிச்சம் கிராமத்தில் தொடங்கியது. ஆனால், அங்குள்ள பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அனுமதி இல்லாமல் கிரேன்கள் மற்றும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததால், அந்தப் பகுதி மக்கள் மற்றும் படக்குழுவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ‘சூர்யா 45’ படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்ற தகவல் வெளியானது.இந்நிலையில், ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இதை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உறுதி செய்துள்ளார்.