நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம், அனிருத் இசையமைப்பில் உருவாகி, ரூ.600 கோடிக்குமேல் வசூலித்து சாதனை புரிந்தது. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘ஜெயிலர் 2’ எனும் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற இந்தப் படத்திற்கு, மீண்டும் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்றது. அதன் பின்னர், தற்போது இந்த படப்பிடிப்பு பணிகள் கேரளாவிலும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கேரள மாநிலத்தின் அட்டப்பாடி மலைத்தொடரில் சுமார் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நேரத்தில், அட்டப்பாடிக்கு வந்த நடிகர் ரஜினிகாந்தை நேரில் காண பல ரசிகர்கள் குவிந்தனர். தனது காரிலிருந்து வெளியே வந்து, கையை அசைத்து ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்வித்தார். பின்னர் மீண்டும் தனது காரில் ஏறி தங்கும் விடுதிக்கு சென்றார். மேலும், ரஜினிகாந்தின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.