இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் இன்று (மார்ச் 8) லண்டனின் அப்போலோ அரங்கில் அரங்கேற்ற உள்ளார். இதற்கு முன்பு, சென்னையில் முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினர். தொடர்ந்து, லண்டன் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, “இது என் பெருமை அல்ல, இது நாட்டின் பெருமை” என்று உருக்கமாக தெரிவித்தார்.

இந்நிலையில், இளையராஜாவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். இதைப் பற்றி எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்த பதிவில், “பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக ரஜினி, இளையராஜாவை ‘சாமி’ என்றே அழைப்பார். இதனால், இன்று வாழ்த்தும் போது கூட அதே அழைப்பை பயன்படுத்தியுள்ளார்.