ரஜினிகாந்தின் நடிப்பில் நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு வெளியானது. அனிருத் இசையமைத்த இந்தப் படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ என்ற இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் அனிருத் தான் இசையமைக்கிறார்.

சமீபத்தில், இப்படத்தின் ஒரு கட்டமான படப்பிடிப்பு கோவையில் முடிவடைந்தது. அதன்பின் கேரளாவின் அட்டப்பாடி மலைத்தொடரில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்ணா ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.’ஜெயிலர் 2′ படப்பிடிப்பு தற்போது தமிழக – கேரள எல்லை பகுதியில், குறிப்பாக கோவை ஆனைக்கட்டி மற்றும் மாங்கரை பகுதிகளில் நடந்து வருகிறது. ரஜினிகாந்த், ஆனைக்கட்டியில் இருந்து மாங்கரைக்கு காரில் பயணித்து, பின்னர் சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம், ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “காஷ்மீரில் அமைதியை குலைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். குற்றவாளிகளை கண்டுபிடித்து, கனவிலும் நினைக்க முடியாத கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்,” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.