தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “லூசிபர்”. இந்தப் படம் பிருத்விராஜின் இயக்குநராகிய முதல் படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது, மற்றும் இதற்கு “எல் 2 எம்புரான்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில், டோவினோ தாமஸ் “ஜதின் ராமதாஸ்” கதாபாத்திரத்தில், பிருத்விராஜ் “சையத் மசூத்”, மற்றும் மோகன்லால் “குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியுள்ள இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதுடன், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
“லூசிபர்” படத்தின் இரண்டாம் பாகமான “எல் 2 எம்புரான்” திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியானது. மேலும், மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மார்ச் 27ஆம் தேதி இப்படம் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் டிரெய்லரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ராஜமௌலி, நடிகர் மோகன்லாலையும், இயக்குநர் பிருத்விராஜ் மற்றும் படக்குழுவினரையும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.