2002ம் ஆண்டு வெளியான ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம், முரளி, ராதா, வடிவேலு ஆகியோர் நடித்த, பெரும் வரவேற்பைப் பெற்ற காமெடி திரைப்படமாகும். யுவஸ்ரீ கிரியேஷன் சார்பில் எஸ்.வி. தங்கராஜ் தயாரித்திருந்தார், இயக்குநர் தாஹா இயக்கியிருந்தார்.

தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ என தலைப்பிட்டுள்ளனர். இதில், கருணாஸ் மற்றும் கருணாகரன் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். மேலும், ஆடுகளம் முருகதாஸ், சாம்ஸ், ரமா, வின்னர் ராமச்சந்திரன், சிசர் மனோகர், டெலிபோன் மணி, வினோத் குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இளம் ஜோடிகளாக விக்னேஷ் – அஞ்சலி இருவரும் அறிமுகமாகின்றனர்.செல்வா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை, முதல் பாகத்தை தயாரித்த எஸ்.வி. தங்கராஜ் மீண்டும் தயாரிக்கிறார். ஹரிஹரன் இசையமைக்க, கருப்புத் தங்கம் என்ற புதுமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.

படத்தைப் பற்றிப் பேசும் போது, இயக்குநர் கருப்புத் தங்கம் கூறியதாவது: “இந்தக் கதையில் நாயகன் பஸ் தான். அதை மையமாக வைத்து கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளோம். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக வரும் அந்த பஸ்சை, பல லட்சம் ரூபாய் செலவில் சொந்தமாக வாங்கி, படத்திற்கு ஏற்றவாறு தயார்படுத்தி, படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.”படப்பிடிப்பு, கொடைக்கானல், பன்றிமலை போன்ற அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் தென்காசி, காரைக்குடி, சென்னை நெல்லிக்குப்பம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.