நடிகர் சிம்பு நடிக்க, கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள எஸ்டிஆர் 48 என்ற படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்காக சிம்பு பல மாதங்கள் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். மேலும், தன்னுடைய கெட்டப்பையும் மாற்றி நீண்ட தலைமுடியை வளர்த்திருந்தார். ஆனால், பல மாதங்களை கடந்தும் இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்காததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டபோது, சிம்பு இருவேறு கெட்டப்புகளில் காணப்பட்டார். ஆனாலும், ஷூட்டிங் தொடங்கப்படாததால், எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் படத்திற்காக நீண்டகாலமாகக் காத்திருந்த சிம்பு, தற்போது கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் சிம்பு கமல்ஹாசனுடன் கலந்து கொண்டார். அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால், ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். இந்தப் படத்தில் சிம்பு, கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை முடித்தவுடன் சிம்பு எஸ்டிஆர் 48 படத்தில் மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
STR48 படத்தில் சிம்புவுக்கு இரண்டு நாயகிகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி இதில் ஒரு நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு பாலிவுட் நடிகையை தேர்வுசெய்துள்ளனர். மற்ற நாயகியைக் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.