இந்தியத் திரைப்படங்கள் சில நேரங்களில் ஜப்பானிலும் வெளியிடப்படுவது வழக்கமாகவே உள்ளது. ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகும் சில திரைப்படங்கள் ஜப்பான் நாட்டின் சினிமா ரசிகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.
அந்த வகையில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியானது. ‘டைம் லூப்’ என்ற தலைப்பில் ஒரு சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும் கதாநாயகனை மையமாக கொண்டு, பரபரப்பாகவும் தனித்துவமான திரைக்கதையுடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றி பெற்ற திரைப்படமாக மாறியது. இது 100 கோடி ரூபாய் வசூலையும் தாண்டியது.
இப்போது, இந்த திரைப்படத்தை ஜப்பான் நாட்டில் மே மாதம் 2ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருப்பதாவது, “ஒரு நல்ல படம் என்பது அழகான பறவை போல. அது எல்லா நிலங்களையும் கடந்து மக்கள் மனதில் இடம் பிடிக்கும். ‘மாநாடு’ படம் தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக இருக்கிறது. இந்த ‘லூப் ஹோல்’ கதைக்களம் ஜப்பானியர்களையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்றார்.