திரையுலகில் பிரபலமானவர்கள் தங்களது தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் சினிமா தொடர்பான தகவல்களை பகிரும் நோக்கத்தில் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் இந்த சமூக வலைதளங்களில் குறிப்பாக எக்ஸ் கணக்குகள், தீய நோக்கத்துடன் செயல்படும் சிலரால் அடிக்கடி ஹேக் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஹேக் செய்யப்பட்டது.

அந்த நேரத்தில் ஸ்ரேயா கோஷல், தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் இந்த தகவலை தெரிவித்து, ரசிகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தார். இப்போது இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், அவரது எக்ஸ் கணக்கை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளார். இதைப்பற்றி அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றின் வாயிலாக பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “நான் மீண்டும் வந்துவிட்டேன். இனிமேல் தொடர்ந்து அதிகம் எழுதப்போகிறேன், பேசப்போகிறேன். பிப்ரவரி மாதத்தில் எனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதில் பல தடைகள் ஏற்பட்டன. ஆனால் எக்ஸ் குழுவின் உதவியால் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. தற்போது அனைத்தும் சீராக உள்ளது. இந்த இடைவேளையில் என்னைப் பற்றிய தவறான கட்டுரைகள், விளம்பரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்கள் என பல விஷயங்கள் என் கணக்கில் பகிரப்பட்டது. இதுபோன்ற விஷயங்களைத் தடுக்கும் வகையில் எக்ஸ் நிர்வாகம் விதிகளை மாற்ற வேண்டும். அவர்கள் விரைவில் மாற்றுவார்கள் என நம்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.