‘இவன் தந்திரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அந்தப்படத்திற்கு பிறகு, விக்ரம் வேதா, ரிச்சி, நேர்கொண்ட பார்வை, மாறா போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக அவர் கதையின் நாயகியாக நடித்த திரைப்படம் ‘விட்னஸ்’ ஆகும். அதன் பின், ‘இறுகப்பற்று’ என்ற அந்தாலஜி திரைப்படத்தில் ஒரு தனிப்பட்ட கதையில் அவர் நடித்திருந்தார்.

தற்போது மூன்று வருடங்களுக்குப் பிறகு, ‘கலியுகம்’ எனும் புதிய படத்தின் மூலம் மீண்டும் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் மே 9ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இது ஒரு போஸ்ட் அபோகலிப்டிக் சைக்காலஜிகல் திரில்லர் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை புதிய இயக்குநரான பிரமோத் சுந்தர் இயக்கியிருக்கிறார். ஆர். கே. இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் கே. எஸ். ராமகிருஷ்ணா மற்றும் கே. ராம்சரண் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். இதில் ஆடுகளம் கிஷோர், இனியன் சுப்ரமணி, அஜ்மல், ஹரி, மிதுன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பணியை தயாரிப்பாளரே ஆன கே. ராம் சரண் மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் உலகமெங்கும் மே 9ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப்படம் குறித்து இயக்குநர் பிரமோத் சுந்தர் கூறியதாவது: “இப்படத்தின் கதை, ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பேரழிவால் சீர்குலைந்த உலகில், மனிதர்களின் உயிர்வாழ்வே ஒரு சவாலாக மாறியுள்ளது. ஒழுக்கமும், அன்பும் காணாமல் போன இந்தச் சூழலில், மனிதர்கள் தங்களுக்குள் போராடும் உளவியல் நிலைதான் இப்படத்தின் மையக்கரு. முற்றிலும் புதிய பின்னணியுடன், பரபரப்பான சம்பவங்களும், மன அழுத்தமூட்டும் திரில்லும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை ஒரு புதிய உலகத்திற்குள் அழைத்து செல்லும் திரைப்படமாக இருக்கும்” என்று கூறினார்.