ராஷ்மிகா மந்தனா நடித்த ஹிந்தி திரைப்படமான தம்மா தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியானது. இதைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள தெலுங்கு படம் தி கேர்ள் பிரண்ட் வரும் நவம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, ராஷ்மிகா தற்போது மைசா என்ற புதிய திரைப்படத்தின் நாயகியாக நடிக்கிறார்.

பல மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று கேரளாவின் அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
புதுமுக இயக்குநர் ரவீந்திரன் புல்லே இயக்கும் இப்படத்தில், ராஷ்மிகா ஒரு பழங்குடியினப் பெண்ணாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டரில், ஆக்ரோஷமான முகபாவனையுடன் பழங்குடியின பெண்ணின் தோற்றத்தில் அவர் தோன்றியிருந்தார், இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ராஷ்மிகாவுடன் நடிகர் தாரக் பொன்னப்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

