‘மாவீரன்’, ‘3BHK’ போன்ற படங்களை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தற்போது போடி ராஜ்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துவரும் புதிய படத்தைத் தயாரித்து வருகிறது. இதேநேரத்தில், தங்களது நான்காவது தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ஹரிஹரசுதன் இயக்கும் இந்தப் படத்தில் யூடியூப்பில் பிரபலமான பைனலி பாரத் நாயகனாக நடித்துள்ளார். இவர் ‘லவ் டுடே’, ‘பிரின்ஸ்’, ‘பரோல்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக ‘குடும்பஸ்தான்’ படத்தின் நாயகியான ஷான்வி மேக்னா நடித்துள்ளார்.

படத்தைப் பற்றிப் தயாரிப்பாளர் அருண் விஸ்வா வெளியிட்டுள்ள பதிவில், “புதிய திறமைகளை ஊக்குவிப்பதும், வலுவான கதைகளைத் தேர்வு செய்வதும் எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அந்த வகையில், பைனலி பாரத் டீனேஜர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரிய அளவில் அறிமுகமான ஒருவர். இந்தப் படத்திற்காக அவருடன் இணைந்து பணிபுரிவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
அதேபோன்று ‘குடும்பஸ்தான்’ படத்தின் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ஷான்வி மேக்னாவும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பது எங்களுக்கு பெருமையாகும். எங்களது ‘புரொடக்ஷன் நம்பர் 4’ மூலம் ஹரிஹரசுதன் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. மேலும், பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரைப் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்,” என்றார்.

