பா.ஜ.க எம்.பியும் நடிகையுமான ஹேமாமாலினியின் மகள் இஷா தியோல், 2012 ஆம் ஆண்டு மும்பை இஸ்கான் கோயிலில் பரத் தக்தானியைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு இருவரும் ஒருமித்த கருத்தின் பேரில் பிரிவைத் தேர்ந்தெடுத்தனர். ஆரம்பத்தில் நடிப்பில் கவனம் செலுத்திய இஷா தியோல், பரத்தைத் திருமணம் செய்த பிறகு நடிப்பை நிறுத்தினார். இருப்பினும் சில திரைப்படங்களை தயாரித்தார்.

இஷா தியோல் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தில் தனது குடும்ப வாழ்க்கையைப் பற்றி பல விஷயங்களை வெளிப்படுத்தியிருந்தார். அதில், “திருமணத்திற்குப் பிறகு என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பரத் குடும்பத்தோடு வாழத் தொடங்கியபின், வீட்டில் ஷார்ட்ஸ் அணிந்து சுதந்திரமாக இருக்க முடியவில்லை. அங்கு பெண்கள் அனைவரும் சமையல் அறையின் தலைவர்களாக இருந்து, தங்கள் கணவர்களுக்காக உணவு டப்பாக்களை தயார் செய்து அனுப்புவார்கள். ஆனால், என் மாமியார் ஒருபோதும் எனக்குச் சமையல் அறையில் வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. அதேபோல, மருமகளாக வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவும் இல்லை. மாறாக, என் மாமியார் என்னை தனது மூன்றாவது மகனாகவே பார்த்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தனது கணவரைப் பிரிந்த பிறகு சமீபத்தில் அளித்த பேட்டியில் இஷா தியோல், “கணவன் மனைவி இடையே ஏற்படும் பிளவுகள் அவர்களின் குழந்தைகளின் நல்வாழ்வை பாதிக்கக்கூடாது. குழந்தைகளுக்காக நீங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். அதில் பிளவு வரக் கூடாது. இது பலருக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் முயற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த முயற்சியை ஒருபோதும் கைவிடக்கூடாது” என்று வலியுறுத்தினார்.